கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்ட இடம். 
உள்ளூர் செய்திகள்

கடையம் மலையடிவாரத்தில் கொட்டப்படும் எலக்ட்ரானிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

தென்காசி மாவட்டம் கடையம் வனப்பகுதியில் எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்டி எரிக்கும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

கடையம்:

தென்காசி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளான தோரணமலை மற்றும் கடவாகாடு பகுதிகள் இயற்கையும், எழிலும் சூழ்ந்த பொதிகை மலையின் அடிவார பகுதிகளாக அமைந்துள்ளன.

கடவா காடு செல்லும் சாலையில் வன விலங்குகளான சிறுத்தை, கரடி, மான், மிளா மற்றும் யானைகள் காட்டுப்பன்றி ஆகியவை இரவு நேரங்களில் அதிகமாக நடமாடுகிறது.

இந்த பகுதியில் சில மர்ம நபர்கள் கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவந்த எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் மின்சார கழிவுகளை எரித்து அதில் இருந்து கிடைக்கும் பித்தளை, செம்பு, இரும்பு போன்ற பொருட்களை பிரித்து எடுக்கின்றனர்.

இதனால் எழும் புகை மூட்டத்தால் சுற்றுப்புற கிராம மக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் இருமல் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

வனவிலங்குகளும் அச்சத்திற்கு உள்ளாகி அவை கிராமங்களுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மாதாபுரம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.