விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டவர்கள். 
உள்ளூர் செய்திகள்

சிவகிரியில் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு

வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவம் சார்பில், ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சை (என்.எஸ்.வி.) விழிப்புணர்வு நிகழ்ச்சி விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் நடைபெற்றது.

மாலை மலர்

சிவகிரி:

தென்காசி மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) அலுவலகத்தின் சார்பாக துணை இயக்குனர் டாக்டர் அனிதா ஆணையின்படி, வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணாபாய் அறிவுரையின்படி, வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவம் சார்பில், ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சை (என்.எஸ்.வி.) விழிப்புணர்வு நிகழ்ச்சி விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் நடைபெற்றது.

விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி ஆகியோர் தலைமை தாங்கினர். 

மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ராஜூ, ஊராட்சி மன்ற செயலர் உமாமகேஸ்வரி, தென்மலை சுகாதார ஆய்வாளர் விஷ்ணு குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தல் மற்றும் நவீன குடும்பக் கட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதை விட ஆண்களுக்கு விரைவாக குறைந்த அளவிலான நேரத்தில் கருத்தடை சிகிச்சை எளிதாக செய்து விடமுடியும் எனவும், குடும்ப கட்டுப்பாடு செய்த ஆண்கள் 15 நிமிடத்தில் தங்களது வேலைகளை செய்யலாம் எனவும் நவீன கருத்தடை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1100 வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

வட்டார மருத்துவ அலுவலர்கள், ஊராட்சி மன்ற அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்