நெல்லை:
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
இதனையொட்டி பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள அறைகளுக்கு சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 632 வாக்குச்சாவடிகளில் நகராட்சி பகுதியில் 338 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 294 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பணியாற்றுவதற்காக 3,056 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
இதில் 134 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு காமிரா, நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இணையதளம் மூலமாகவும் கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சி பகுதியில் 6 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 21 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேரூராட்சி பகுதிகளில் 17 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 33 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.