கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த கிராமமக்கள். 
உள்ளூர் செய்திகள்

தொடக்கப்பள்ளி அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ராஜபாண்டி கிராமத்தில் தொடக்கப்பள்ளி அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

வீ. கே. புதூர்:

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள ராஜபாண்டி கிராமத்தில் 78 வருட பழமை வாய்ந்த இந்து தொடக்கப்பள்ளி உள்ளது.

பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் நிலையில் பள்ளியின் தென்புறத்தில் சுமார் 2 அடி தூரத்தில் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு வாங்கி டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜபாண்டி பொதுமக்கள் செல்போன் உயர் கோபுரம் அமைப்பதனால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சினால் பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருப்பதனாலும், பொதுமக்களும் அச்சப்படும் சூழ்நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால்  மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி மற்றும் குடியிருப்பு அருகே  செல்போன் டவர்  அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென 50-க்கும் மேற்பட்ட ராஜபாண்டி ஊரை சேர்ந்த பொதுமக்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.