நட்சத்திர ஓட்டல் 
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் ரூ.12 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுத்திய நட்சத்திர விடுதிக்கு ‘சீல்’

தஞ்சையில் குத்தகை நிலம் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயில் 12 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுத்திய நட்சத்திர விடுதிக்கு கலெக்டர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை தெற்கு போலீஸ் நிலையம் எதிரில் ஓட்டல் டெம்பிள் டவர் பிரைவேட் லிமிடெட் செயல்பட்டு வந்தது. மூன்று நட்சத்திர ஓட்டலான இங்கு ரெஸ்டாரன்ட், தங்கும் விடுதிகள், மதுபான பார் உள்ளன. 

இந்த நிறுவனம் அமைந்திருக்கும் இடமானது வருவாய்த்துறைக்கு சொந்தமாகும். மொத்தம் 1 ஏக்கர் 6160 சதுர அடி ஆகும். கடந்த 1994-ம் ஆண்டு 30 ஆண்டு கால குத்தகைக்கு இந்த ஓட்டல் செல்வராஜ் என்பவருக்கு விடப்பட்டது. 

இந்நிலையில் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் என்பவர் குத்தகை ஒப்பந்தத்தை மீறி வேறு நபர்கள் ஆன வெங்கடாச்சலம், குமார் ஆகியோருக்கு ஓட்டல் நிறுவனத்தை நடத்திக் கொள்ள விதிமுறைகளை மீறி அரசின் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக வழங்கியுள்ளார். 

இதையடுத்து வெங்கடாச்சலம், குமார் ஆகியோர் டெம்பிள் டவர் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் குத்தகை விதிமீறல்களுக்கு விளக்கம் கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாக இதுகுறித்து டெம்பிள் டவர் நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை. மேலும் கடந்த 14-ந் தேதி  தாசில்தார் மூலமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த 22-ந் தேதி வெங்கடாசலம் என்பவர் மேற்கண்ட ஓட்டலை தாங்களே நிர்வகித்து வருவதாக கூறியுள்ளார். இதன் மூலம் அவர்கள் அரசிடம் முறையாக அனுமதி பெறாதது தெரிய வந்தது. 

எனவே விதிமுறைகளை மீறி அரசுக்கு ரூ.12 கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பை ஏற்படுத்திய டெம்பிள் டவர் ஓட்டலை சீல் வைத்து குத்தகைதாரர் செல்வராஜ்க்கு  வழங்கப்பட்ட  குத்தகை உரிமையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் வெங்கடேசன், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் அதிகாரிகள் இன்று காலை ஓட்டல் டெம்பிள் டவருக்கு வந்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

தொடர்ந்து ஓட்டலில் தங்கியிருந்தவர்களை அறைகளை விட்டு வெளியேற்றினர். அங்கு பணிபுரிந்த ஊழியர்களையும் வெளியேற்றினர். சமையல் கூடத்தில் இருந்த சிலிண்டர்கள் மற்றும் ஓட்டலில் இருந்த பொருட்கள் வெளியே வைக்கப்பட்டது

இதையடுத்து கலெக்டர் உத்தரவுபடி டெம்பிள் டவர் ஓட்டல் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.