குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லை அடுத்த மா.மு.கோவிலூர் மொண்டியபட்டி பிரிவு அருகே வெட்டு காயங்களுடன் வாலிபர் பிணம் கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதற்கிடையே சம்பவ இடத்தில் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்தனர். இதில் அவர் பெரியகோட்டையைச் சேர்ந்த முனியப்பன் மகன் கோபால்சாமி (வயது 29) தனியார் நிறுவன ஊழியர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பெரியகோட்டையை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கோபால்சாமிக்கும் நேற்று உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆகவே இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பெரியகோட்டை பகுதிகளில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.