நாகர்கோவில்:
கோவை மாவட்டம் பல்லடம் ராயபாளையம் அபிராமி நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரி(26). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கோவை மாவட்டம் பல்லடத்தில் வேலை பார்த்தபோது நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நட்பாக பழகினேன். பின்னர் அவர் காதலிப்பதாக என்னிடம் கூறி அடிக்கடி போனில் பேசி வந்தார். இந்நிலையில் என்னை மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு அழைத்து சென்று திருமணம் செய்வதாகக் கூறி ஓட்டலில் வைத்து என்னுடன் உல்லாசமாக இருந்தார். இதன் மூலம் நான் கர்ப்பம் ஆனேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி கருவை கலைக்கவைத்தார்.
பின்னர் கன்னியாகுமரிக்கு என்னை அழைத்து வந்து ஓட்டலில் தங்கவைத்துவிட்டு பின்னர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றபோது அவருடைய அப்பா அம்மா அக்கா ஆகியோர் என்னை மிரட்டினார்கள். மேலும் நான் படிக்கவில்லை. அழகாக இல்லை என்று கூறி என்னை மிரட்டினார்கள். எனவே என்னை காதலனுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.
இந்த நிலையில் வெங்கடேஷ்வரி இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டரை சந்தித்து மனு அளிக்க சென்ற அவர் திடீரென வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபருடன் சேர்த்து வைக்குமாறு கூறினார்.
இதையடுத்து போலீசார் வெங்கடேஷ்வரியை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அந்த பெண் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் வெங்கடேஷ்வரியை வேனில் ஏற்றி கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.