ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலஆவாரம்பட்டியை சேர்ந்தவர் மதிமன்னன் (வயது28). விவசாய கூலி தொழிலாளியான இவர் முதல் மனைவியை பிரிந்து 2-வதாக பாண்டிச்செல்வி (22) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இன்று காலை சமையல் செய்வது தொடர்பாக மதிமன்னவனுக்கும், பாண்டிச்செல்விக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
2 பேருக்கும் கடும் வாக்குவாதம் முற்றவே பாண்டிச்செல்வி அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டார். அங்கு வந்த மதிமன்னன் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மதிமன்னன் வீட்டின் பின்புற காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த மனைவி பாண்டிச்செல்வியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மதிமன்னன் அங்கிருந்து தப்பினார்.
கொலை குறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டிச் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மனைவியை கொலை செய்த மதிமன்னன் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.