கைது 
உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்சில் குழந்தையிடம் நகை திருடிய இளம்பெண் கைது

மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்சில் குழந்தையிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

குழித்துறை:

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் மேரிபுஷ்பம். இவரது மகள் சௌமியா. இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதையடுத்து மேரி புஷ்பம் தனது மகளை அழைத்துக் கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார். பின்னர் மேரிபுஷ்பம் அவரது மகள் சௌமியா பேத்தி லியா ஆகியோர் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல பஸ்ஸில் புறப்பட்டனர்.

பஸ் சென்று கொண்டிருந்தபோது மரிய புஷ்பத்தின் பேத்தி லியா காலில் கிடந்த தங்க கொலுசை பெண்ணொருவர் பறிக்க முயன்றார். இதை பார்த்த மரியபுஷ்பம் கூச்சலிட்டார். இதையடுத்து அந்தப் பெண் பஸ்ஸிலிருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பொது மக்கள் பிடியிலிருந்த இளம் பெண்ணை மீட்டனர். அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். தனது ஊர் நாகர்கோவில் மதுரை என்று மாற்றி மாற்றி கூறிக்கொண்டிருந்தார்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவரது பெயர் தேவி (வயது 24) என்பது தெரியவந்தது. தற்போது அவர் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் வசித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். தேவி மேலும் சில நபர்களிடம் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்து உள்ளது. போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இந்த திருட்டு வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஓடும் பஸ்சில் குழந்தையிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.