சேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் அஜித்குமார் (26), தச்சு தொழிலாளியான இவர் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஜோதி (22)என்ற பெண்ணை காதலித்து வந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றிரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அஜித்குமார், மனைவி ஜோதியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அப்போது மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஜோதி அம்மாப்பேட்டை பழனியாண்டி மருத்துவமனை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் நள்ளிரவில் அஜித்குமார் வேறு ஒருவரிடம் செல்போனை வாங்கி மனைவியிடம் பேசினார். அப்போது மனைவியை வீட்டிற்கு வருமாறு கூறினார். ஆனால் ஜோதி மறுத்ததுடன் காலையில் வந்து விடுவதாக கூறினார்.
இந்தநிலையில் அஜித்குமாரை வழக்கமாக வேலைக்கு அழைத்து செல்லும் நபர் இன்று காலை அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அஜித்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் கிடந்தார். இதனை பார்த்த அவர் மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் கதறினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர் பரிசோதனை செய்த போது அஜித்குமார் இறந்து விட்டது தெரிய வந்தது.
பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் அங்கு விரைந்து வந்து அஜித்குமார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.