திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை சுரேஷ் முருங்கப்பாக்கம் கல்லூரி சாலையில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் அருகில் சென்ற மின்சார கம்பியை பிடித்தார். இதில் சுரேஷ் மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ரோசணை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இன்று காலை சுரேஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் திடீரென திண்டிவனம் முருங்கப்பாக்கம் கல்லூரி சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்த சுரேஷின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ரோசணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.