கோவை:
சென்னையை சேர்ந்தவர் நித்யா லட்சுமி (வயது 34). இவர் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2011-ம் ஆண்டு எனது முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று 2-வதாக கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (36) என்பவரை திருமணம் செய்து கொண்டேன்.
திருமண நிச்சயத்தின் போது எனது கணவருக்கு ரூ. 50 ஆயிரம் பணமும், திருமணத்தின் போது 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 50 ஆயிரமும் கொடுத்தேன். பின்னர் மலுமிச்சம்பட்டியில் தனது கணவர் மற்றும் அவரது தாயார் அம்சவேணி, தந்தை சக்திவேல் ஆகியோருடன் வசித்து வந்தேன்.
அப்போது விஜயகுமார் என்னை தாக்கி ரூ. 1 லட்சம் கேட்டார். அந்த சமயத்தில் கருவுற்று இருந்தேன். இதனை தெரிந்துகொண்ட எனது கணவர் குடும்பத்தினர் கருவை கலைக்க கூறினர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டு சென்னையில் உள்ள எனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். அங்கு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனது கணவர் விஜயகுமார் குழந்தையை பார்ப்பதற்கு சென்னை வந்தார். பின்னர் அங்கு இருந்து கோவை திரும்பினார். அதன் பின்னர் விஜயகுமார் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
அப்பேது ஒரு பெண் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு எனது கணவரை திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார். இதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். எனவே எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்ககை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.