காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பள்ளத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 35). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (26). இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரீத்தி (9), அருணி (8), குகன் (6) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், சரண்யாவை சரமாரியாக அடித்து உதைத்தும், கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்தார்.
இது குறித்து சரண்யாவின் தம்பி நந்தகுமார் (24) தீவட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் மனைவியை கொன்றது ஏன்? என அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-
எனக்கும், சரண்யாவுக்கும் ஒரே ஊர் என்பதால், எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மலர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
நான், வேலை செய்வதில் கிடைக்கும் பணத்தை கொண்டு சென்று டாஸ்மாக் கடையில் கொடுத்து மது வாங்கி குடித்து வந்தேன். இதனால் எனது மனைவி என்னிடம் நமக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வளர்ந்து வருகிறார்கள். நீங்கள் தினமும் மது குடித்து வந்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். மது குடிப்பதை கைவிடுங்கள் என அறிவுரை கூறினார். ஆனால் நான் கேட்கவில்லை.
மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக டாஸ்மாக் கடைக்கு நண்பர்களுடன் சென்று மது வாங்கி குடித்து வந்தேன். இதை அறிந்த சரண்யா என்னை கண்டித்து வந்தார். இது எனக்கு பிடிக்க வில்லை. இதனால் அவரை அடிக்கடி அடித்து உதைத்து வந்தேன்.
சரண்யாவை அடிக்கும்போது குழந்தைகள் தன்னிடம் அம்மாவை அடிக்காதீர்கள் என கெஞ்சுவார்கள். மேலும் அக்கம் பக்கத்தினர், உறவினர்களும் சமாதானப்படுத்துவார்கள். இருப்பினும் என்னால் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியவில்லை.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன். அப்போது சரண்யா, என்னிடம் மது குடித்து விட்டு வீட்டுக்குள் வராதீர்கள் என சத்தம் போட்டார். இதனால் எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நான் ஆத்திரத்தில் சரண்யாவை சரமாரியாக தாக்கினேன். அவர் எனது கைகளை பிடித்து தடுத்தார்.
இதனால் அவரது தலைமுடியை பிடித்து இழுத்தேன். இதில் கீழே விழுந்த அவரை நான் விடவில்லை. தரதரவென தரையில் இடித்தேன். வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். உடனே முகம், நெற்றியை பகுதியில் பளார் பளார் என அறைந்தேன். இதில் சரண்யா நிலை குலைந்தார். பின்னர் சரண்யாவின் கழுத்தை நெரித்து தரையில் அழுத்தினேன். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை உறுதிபடுத்திக் கொண்ட நான் வீட்டை விட்டு வெளியே சென்றேன்.
பின்னர் வெகுநேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்த நான், சரண்யா இறந்து கிடக்கிறார். எப்படி இறந்தார்? என தெரியவில்லை என்று சரண்யாவின் உறவினர்களிடம் கூறி நாடகமாடினேன். முதலில் அவர்கள் எனது பேச்சை நம்பினார்கள். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் என்னால் தப்ப முடியவில்லை. உண்மையை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு லட்சுமணன், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
கைதான லட்சுமணனை போலீசார் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.