சேலம்:
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரகினா (வயது 32). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் சரவணன் அடிக்கடி செல்பானில் மணிக்கணக்கில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதில் இருந்து மீள வேண்டி அவருக்கு மனைவி பலமுறை அறிவுரை கூறினார். ஆனால் சரவணன் கேட்கவில்லை. வழக்கம் போல் நேற்றும் அவர் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார்.
ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி இருந்ததால் அவரை, ரகினா சத்தம் போட்டார். குடும்பத்தை கவனிக்காமல் இப்படி செல்போனில் விளையாடி நேரத்தை வீணடிக்காதீர்கள் என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த ரகினா வீட்டின் ஒரு அறையில் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த சரவணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு ரகினா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு சரவணன் கதறி அழுதார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், ரகினா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.