சேலம்:
சேலம் கொண்டலாம் பட்டி அருகே உள்ள வேம்படி தாளத்தை சேர்ந்தவர் சண்முகம், சாயப்பட்டறை உரிமையாளர். இவர் காக்காபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி பின்புறமாக இருந்த விசைத் தறி கூடத்தை விலைக்கு வாங்கி அங்கிருந்த தறிகளை அப்புறப்படுத்தி விட்டு பழைய கட்டிடத்தை இடித்து புதுப்பிக்க திட்டமிட்டார்.
இதையடுத்து இந்த பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் அன்னதானப்பட்டி அருகே உள்ள நெத்திமேடு சூரியன் காட்டைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 31) என்பவரும், வேம்படி தாளம் அருகே உள்ள சின்ன ஏரிக்கரையை சேர்ந்த ரமேஷ் (35), அதே ஊரை சேர்ந்த செல்வம் (30), லோகேஸ்வரன் (18) ஆகிய 4 பேரும் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று கட்டிடம் இடிந்து விழுந்தது.
20 அடி உயரத்தில் இருந்து சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்து வந்த 4 பேரும் இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இந்தநிலையில் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து இடிபாட்டில் சிக்கிய அவர்களை காப்பாற்றி அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் மோகன் ராஜிக்கு கால் முறிவும், ரமேசுக்கு காலில் பலத்த காயமும் ஏற்பட்டது. மேலும் செல்வம், லோகேஸ்வரன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். 4 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவத்தில் கட்டிட உரிமையாளர் சண்முகம் மீது ஐ.பி.சி. பிரிவு 288 (கட்டிடங்களை இடித்தல் அல்லது பழுது பார்த்தலின் பொருட்டு கவனக்குறைவாக இருப்பது, ஐ.பி.சி. பிரிவு 337 (உயிருக்கு, தனி நபருக்கு காயம் ஏற்படுத்துதல்) ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.