தனியார் விடுதி சமையல் அறைக்கு சீல் 
உள்ளூர் செய்திகள்

தரமற்ற உணவால் தொழிலாளர்களுக்கு வாந்தி-பேதி: தனியார் விடுதி சமையல் அறைக்கு சீல்

பூந்தமல்லி அருகே தொழிலாளர்கள் தங்கியிருந்த உணவு விடுதியின் சமையலறைக்கு திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவள்ளுர்:

பூந்தமல்லி அடுத்த ஜமீன் கொரட்டூரில் உள்ள தனியார் கட்டிடத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஏராளமான பெண் தொழிலாளர்கள் தங்கி இருந்தனர்.

கடந்த 16-ந்தேதி விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவு காரணமாக 159 தொழிலாளர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மேலும் சிகிச்சைக்கு சென்ற பெண் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரவியதால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுங்கு வார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட 5 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சுங்குவார்சத்திரத்தில் 16 மணி நேரம் நீடித்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் சங்கியிருந்த விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்று இருந்தனர்.

இதில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரமற்றவையாக இருந்ததால் பாதிப்பு ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

இந்த நிலையில் தொழிலாளர்கள் தங்கியிருந்த உணவு விடுதியின் சமையலறைக்கு திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தரமற்ற உணவு சமைத்த சமையலாளர், உரிமையாளர் மற்றும் அனுமதியின்றி கல்லூரி வளாகத்தில் தொழிலாளர்களை தங்க வைக்க அனுமதி அளித்த கல்லூரியின் உரிமையாளர் என மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் சமையலறை மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.