விடுதலை சிறுத்தை கட்சி 
உள்ளூர் செய்திகள்

தென் மாநிலங்களில் வேரூன்றும் விடுதலை சிறுத்தை கட்சி

சமத்துவம், சமூக நீதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை மையமாக வைத்து விடுதலை சிறுத்தை செயல்படுவதால் தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தை காலுன்றி வருகிறது என்று கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வம் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விடுதலை சிறுத்தை கட்சி பல்வேறு தேர்தல்களை சந்தித்து மக்கள் பிரதிநிதித்தும் பெற்றுள்ளது.

இதேபோல கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் கட்சியை வளர்ப்பதற்கான வலுவான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆந்திரா மாநிலம் ஒங்கோல் மாவட்டம் கனிகிரி கிராமத்தில் அம்பேத்கார் சிலையை நேற்று திறந்து வைத்தார்.

மேலும் 3 நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கட்சி தலைவரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

ஆதிக்க சக்தி - சுரண்டலுக்கு எதிராக மக்களை திரட்டுவது சமத்துவம், சமூக நீதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை மையமாக வைத்து விடுதலை சிறுத்தை செயல்படுவதால் தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தை காலுன்றி வருகிறது.

ஜனாதன சக்திகளுக்கான எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்வதால் மொழி தடை இல்லாததால் இந்த மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். ஆந்திரா, தெலுங்கானா பகுதியில் இருந்து தீவிர கம்யூனிஸ்டுகள் வெளியேறி வருகிறார்கள் என்றார்.

தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தை ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். விரைவில் கட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

ஆந்திரா மாநில தலித் மக்கள் பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்தில் திருமாவளவன் குரல் கொடுத்து வருகிறார்.

ஆந்திரா, தெலுங்கானாவில் தலித் மக்களுக்கு கட்சி தலைமை இல்லாத சூழல் உள்ளது. ஆந்திரா அரசியலுக்கு ஏற்ற கொள்கை நிலைப்பாடு இருப்பதால் விடுதலை சிறுத்தையை ஏற்றுக் கொள்கிறார்கள். தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தை வேரூன்றி உள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.