சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மே 5-ந் தேதி (வியாழக் கிழமை) தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான வணிகர் சங்கங்களில், வணிகர் தினவிழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டீர்களா?
ஆணையிடுவது எனது வழக்கமில்லை நான் உங்களில் ஒருவன். அதனால் தான் எங்கள் சங்கத்தில் நான் கொடியேற்றும்போது உங்கள் பகுதி சங்கத்தில் நீங்கள் கொடியேற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.
மே 5-ந் தேதி காலை 10 மணிக்கு உங்கள் சங்கத்தில் கொடியேற்றுங்கள். எளிய வணிகர்களுக்கு உதவுங்கள். சுதேசி உறுதிமொழியைப் பிரகடனம் செய்யுங்கள். சுதேசி நாயகர்கள் காந்திஜி, வ.உ.சி. படங்களுக்கு மலர் அஞ்சலி செய்யுங்கள்.
இந்த ஆண்டு மே 5-ந் தேதி மாநில மாநாடு நடத்தப்படமாட்டாது.
விழா தொடர்பான விவரங்கள், புகைப்படங்களை மாவட்ட நிர்வாகிகள் மூலமோ, Vellaiyantnvsp@gamail.com என்கிற மின்னஞ்சல் மூலமாக என் பார்வைக்கு அனுப்பி வையுங்கள். பேரவையின் வேர்கள் வலுவாக இருக்கிறதா என்பதை இந்த ஆண்டு தெரிந்து கொள்வோம்.
2023-ல் மாநில அளவில் நடக்கும் வணிகர்தின மாநாட்டில் மீண்டும் நமது பலத்தை நிரூபிப்போம். அண்ணல் காந்தியின் சுதேசிக் கொள்கையே இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடி.
சுதேசி தொழில்- வணிகத்தைக் காப்பதன் மூலமே சுயதொழில்களை மீட்க முடியும். இந்த உண்மைகளை உளமாற ஏற்கிறேன்.
வணிகர் என்கிற முறையில் சுதேசி தயாரிப்புகளுக்கே முன்னுரிமை தருவேன் என்று உறுதியேற்கிறேன்.
அண்ணல் காந்தி, வ.உ.சி. வழியில் அந்நிய தொழில்- வர்த்தக ஆதிக்கத்தைத் தகர்க்கத் துணை நிற்பேன் என்று உறுதியேற்கிறேன்.
இவ்வாறு த.வெள்ளையன் அதில் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... பைக்ரேசில் ஈடுபடும் சிறுவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை- போலீசார் அதிரடி