விபத்து 
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை அருகே வாகனம் மோதி 8-ம் வகுப்பு மாணவன் பலி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வாகனம் மோதியதில் 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த இலத்தூர் அருகே உள்ள கொடிக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மகன் பரமசிவம்(வயது 14).

இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அந்த பகுதியில் கோவில் திருவிழா நடந்துள்ளது.

அதனை பார்ப்பதற்காக ரமேஷ் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இரவு கோவில் திருவிழாவை பார்த்து முடித்துவிட்டு அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளனர்.

கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குடும்பத்தினர் நடந்து வந்தபோது பலத்த மழை பெய்துள்ளது.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பரமசிவம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயம் அடைந்த பரமசிவத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.