சென்னை:
2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லை தொடர்பாக தேசிய வனஉயிரின கழகத்திடம் ஒரு முன்மொழிவு அளிக்கப்பட்டது. அதில், சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கி.மீ. சுற்றளவில் இருந்து 3 கி.மீ. சுற்றளவுக்கு குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி 5,467 ஹெக்டேர் நிலப்பகுதியில் கட்டுமானங்களுக்கு அனுமதியளிக்கப்படும் சூழ்நிலை உருவானது. மேலும், சரணாலயத்தின் 2 கி.மீ. பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து விலக்களிக்கும் நிலையில், அங்குள்ள மக்கள் சிறிய அளவில் தொழில் செய்யவும், நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றிக் கொள்ளவும் வசதி ஏற்பட்டது.
அரசின் இந்த முடிவுக்கு வனவியல், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே சரணாலயத்தின் பரப்பை குறைக்கும் நடவடிக்கை இல்லை என்று வனத்துறை கூறியிருந்தது.
இந்த நிலையில் அங்குள்ள நிலப்பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நிரஜிடம் அரசு கேட்டது. அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகுவிற்கு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நிரஜ் 15-ந் தேதி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வேடந்தாங்கல் என்பது நாட்டிலும், தமிழகத்திலும் மிகவும் பழமையான நீர்வாழ் பறவைகள் சரணாலயமாகும். ஆண்டுதோறும் எடுக்கப்பட்டு வரும் பறவைகள் கணக்கெடுப்பில் 28 ஆயிரம் நிலம் மற்றும் நீர்வாழ் பறவையினங்கள் இந்த ஈர நில சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.
இந்நிலையில், இந்த வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்தால், பல்லுயிர் பரவல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பறவைகள் எண்ணிக்கையும் குறைந்துவிடும். குறிப்பாக நீர்வாழ் பறவைகளின் வாழ்விடம் முழுமையாக பாதிக்கப்படும்.
பரப்பளவை குறைக்கும் பரிந்துரை பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் வாழ்விடத்தை கருத்தில் கொண்டு, ஏற்கனவே எல்லையைக் குறைக்கக் கோரி அனுப்பிய முன்மொழிவை நிரந்தரமாக திரும்பப் பெற்றுக்கொண்டதாக கருத வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...10.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் முழு வெற்றி கிடைக்கும் - ராமதாஸ்