விபத்தில் சிக்கிய வேன் 
உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை அருகே விபத்து- வியாபாரி உள்பட 2 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை மலர்

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் சரவணன் (வயது 45).

இவர் அங்குள்ள சரஸ்வதி வாசக சாலை தெருவில் மீன்கடை நடத்தி வருகிறார். கடைக்கு தேவையான மீன்களை ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு நேரடியாகச் சென்று சரவணன் வாங்கி வருவது வழக்கம்.

தினமும் ஆம்னி வேனை அவரே ஓட்டிச் சென்று மீன் வாங்கிக் கொண்டு வருவார். இன்று காலை தொண்டி சென்று மீன்களை வாங்கிக் கொண்டு சரவணன் தேவகோட்டை புறப்பட்டார்.

காலை 9 மணியளவில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புளியால் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாணான்வயல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (54), ஆறுமுகம் மகன் கண்ணதாசன் (27) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மீன்பாரம் ஏற்றி வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் வேனை ஓட்டிவந்த சரவணன், மோட்டார்சைக்கிளில் வந்த முருகன் ஆகிய 2பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். கண்ணதாசன் படுகாயமடைந்து கிடந்தார். அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பலியான சரவணன், முருகன் உடல்களை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.