சென்னை:
ம.தி.மு.க. பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:-
தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள, நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்து, காலதாமதம் இன்றி, உடனடியாக, குடியரசுத் தலைவருக்குப் ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்.
கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், கட்டாய நன்கொடைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனையைக் கடுமையாக்கிடவும் உரிய திருத்தங்களை ஒன்றிய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று 21.03.2022 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது. இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை துரிதப்படுத்த வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு, முல்லைப் பெரியாறில் புதிய அணையைக் கட்டுவோம் என்று கேரள அரசு ஆளுநர் உரையில் அறிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
தமிழக அரசு விழிப்பு உணர்வுடன் கண்காணித்து, கேரள அரசின் முயற்சிகளை முறியடித்து, முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க தமிழக அரசு கேட்டுள்ள ரூ.6,230 கோடி நிதியை, மத்திய பா.ஜ.க. அரசு உடனே விடுவிக்க வேண்டும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்புதான் முக்கியம். எனவே நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கவே முடியாது” என, தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல் வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, ம.தி.மு.க. பொதுக்குழு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் இனப்படு கொலையை முன்னின்று நடத்திய சிங்கள இனவாத ராஜபக்சே அரசுக்கு, இந்தியா 18 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க ஒப்புதல் வழங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழர்களின் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கும் இத்தகைய நடவடிக்கையை, ஒன்றிய பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர்களின் இறையாண்மையைத் தீர்மானிக்கின்ற வகையில், சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பது குறித்து, இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில் பரவி இருக்கின்ற ஈழத்தமிழர்கள், அந்தப் பொது வாக்கெடுப்பில் பங்கேற்க ஐ.நா. மன்றம் ஆவன செய்ய வேண்டும்.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்து இருப்பது, கடும் கண்டனத்திற்கு உரியது. 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, சங்பரிவார் பாசிச சக்திகளை அடியோடு வீழ்த்த வியூகம் அமைக்க வேண்டியதன் கட்டாயத்தை, 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. அந்த இலக்கை அடைவதற்கு, மாநிலக் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.
மார்ச் 28, 29-ந்தேதிகளில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதற்கு, மதிமுக முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒரே நேரத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வாட்டி வதைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு இப்பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
ம.தி.மு.க.வின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் தீங்கு இழைப்பவர்கள் மீது, கழக சட்டதிட்ட விதிகளின்படி பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரத்தைச் செயற்படுத்தி, உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான முழு உரிமையை கழகப் பொதுச்செயலாளருக்கு வழங்குவது என் தீர்மானிக்கப்படுகிறது.
மேற்கண்டவை உள்பட மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.