சென்னை:
முறையான பயிற்சி பெற்று, பதிவு செய்யப்பட்டு நடத்தப்படும் ஸ்பாக்களில் சோதனை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு செய்வதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேவையில்லாமல் போலீசார் ஸ்பாக்களுக்குள் சென்று தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. அதன்பின்னரும் போலீசார் தொந்தரவு செய்வதாக, சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது. போலீஸ் தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார்.
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர், ஸ்பாக்களில் குற்றச்செயல்கள் அதிகம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஸ்பாக்களில் போலீசார் சோதனை செய்தனர். ஸ்பாக்கள் நடத்துவதில் ஏற்பட்ட போட்டியில் சேலத்தில் இளம் பெண் ஒருவர் படுகொலை செய்துள்ளார்.
அதுமட்டுமல்ல, ஸ்பா, பியூட்டி பார்லர் போன்ற இடங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா? என்பதை பயிற்சிப் பெற்ற தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற சோதனை நடத்தியதில் ஸ்பாக்களில் தவறான செயலில் ஈடுபட வைத்திருந்த 4 இளம் பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.
அதுமட்டுமல்ல, ஸ்பா போன்ற இடங்களில் நடைபெறும் விபசாரத்தை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விபசார தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த ஐகோர்ட்டு உத்தரவை மீறியோ, அவமதிக்கும் நோக்கத்துடனோ போலீசார் ஸ்பாக்களில் சோதனை நடத்தவில்லை.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.