சென்னை:
தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஒப்பந்தத்தில் பணியாளர்களின் ஊதியம், அகவிலைப்படி, இதர படிகள் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
13-வது ஊதிய ஒப்பந்தம் 31.8.2019 உடன் நிறைவடைந்தது. 2019-ம் ஆண்டு செப்டம்பரில் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடித்து தொழிலாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை சம்பளம் உயர்ந்திருக்கும்.
ஆனால் அரசின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததாலும், கொரோனா பொதுமுடக்கம் காரணமாகவும் பேச்சு வார்த்தை தாமதமானது.
இதனால் 14-வது ஊதியக் குழுவுக்கான பேச்சு வார்த்தை நடத்தக்கோரி கடந்த 1-ந்தேதி தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பல்லவன் இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 14-வது ஊதியக்குழு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த கூட்டத்தில் 67 பேரவை தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை வருகிற 29-ந்தேதி காலை 11 மணிக்கு குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் மீண்டும் தொடங்குகிறது.
அரசு அறிவுறுத்தலின்படி கொரோனா முன்எச்சரிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டி உள்ளதால் இந்த பேச்சுவார்த்தையில் தொழிற் சங்கம், பேரவை சார்பில் தலா 1 பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.