கோவை:
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் போன்றவற்றை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்றும், நாளையும் தொழிற்சங்கத்தினர் நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
கோவை மாவட்டத்தில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே மத்திய தபால் தந்தி அலுவலகம், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம், வால்பாறை காந்தி சிலை, கவுண்டம்பாளையம் பஸ் நிலையம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், சூலூர் பஸ் நிலையம், கோவை வடக்கு சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் ரோடு நெசவாளர் காலனி ரோடு சந்திப்பு பகுதி, சிங்காநல்லூர் என்.ஜி.ஆர். சிலை, மதுக்கரை மார்க்கெட் , குனியமுத்தூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம், திருச்சி சாலை எல்.ஐ.சி. அலுவலகம் உள்பட 13 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூசி., எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ. எம்.எல்ப்., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எஸ்.டி.டி.யூ., எல்.டி.யூ.சி., உள்ளிட்ட 12 தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் என பலரும் திரண்டு வந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
தொழிற்சங்கங்களின் இந்த போராட்டம் காரணமாக வங்கி பணிகள், எல்.ஐ.சி. பணிகள், தபால் சேவை உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் இருக்கும் என நினைத்து பணம் எடுக்க, டெபாசிட் செய்வதற்காக பலரும் காலையிலேயே வங்கிக்கு வந்தனர். ஆனால் வங்கிகள் மூடப்பட்டிருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 2 நாட்கள் நடக்கும் போராட்டத்தால் வங்கி பணிகள் அனைத்தும் தேக்கம் அடைந்தது.