செஞ்சி:
கொரோனா தாக்கம் காரணமாக 14 ,15, 16 ஆகிய 3 நாட்கள் செஞ்சி கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. காணும் பொங்கல் அன்று ஒவ்வொரு வருடமும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் செஞ்சி கோட்டைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த 16-ந்தேதி கோட்டைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை.
இந்நிலையில் நேற்று அரசு விடுமுறை என்பதாலும் 3 நாட்கள் கோட்டை மூடப்பட்டு இருந்ததாலும் நேற்று அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் செஞ்சிக் கோட்டைக்கு வந்து இருந்தனர்.
இதில் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் அதிகமாக இருந்தனர். சுற்றுலா பயணிகள் செஞ்சிக்கோட்டையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று தாங்கள் கொண்டு வந்திருந்த தின்பண்டங்கள் மற்றும் உணவுகளை உண்டு மகிழ்ந்து கோட்டையை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
செஞ்சிக்கோட்டை அலுவலர் மேற்பார்வையில் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செஞ்சிக்கோட்டைக்கு செல்வதற்கு ஆன்லைன் மூலமே டிக்கெட் எடுத்து செல்லவேண்டும். ஆனால் கோட்டையில் சில நேரங்களில் ஆன்லைன் டிக்கெட் எடுப்பது சிரமமாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு டிக்கெட் கிடைத்து கோட்டைக்கு சென்றனர். ஒரு சிலர் டிக்கெட் கிடைக்காததால் திரும்பி சென்றனர்.