சென்னை மாநகராட்சி 
உள்ளூர் செய்திகள்

சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:

நகராட்சி நிர்வாக இயக்குனர் 11-ம் தேதி அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகளை இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிப்பது தொடர்பான கருத்துருவை அனுப்பியிருந்தார். அதை ஏற்றுக்கொண்டு அது தொடர்புடைய விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என கோரியிருந்தார்.அவரது கருத்துருவை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்கிறது.

அதன்படி, ஆதிதிராவிடர் (பொது), ஆதிதிராவிடர் (பெண்கள்), பொது (பெண்கள்) ஆகிய பிரிவினருக்கு மேயர் பதவி இடஒதுக்கீட்டிற்கான உத்தரவு வெளியிடப்படுகிறது. 

சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவி ஆதிதிராவிடர் (எஸ்.சி.) பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் (பொது) பிரிவுக்கு வழங்கப்படுகிறது. கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...ஐஷ்வர்யாவை பிரிந்தார் நடிகர் தனுஷ்