திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வரக்கூடிய சூழ்நிலையில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் இந்து முன்னணி சார்பில் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மதமாற்றம் தொடர்பான புகாரில் உண்மையில்லை என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. மதமாற்ற புகார் தொடர்பான புகாரில் உண்மையில்லை என்பதால், பொய்யான புகாரை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இதுபோன்ற புகார் இருந்தால் மாணவிகள் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும் பள்ளிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.