நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது38), லோடு ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்றிரவு நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
போலீசார் அங்கு விரைந்து சென்று சசிக்குமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இடப்பிரச்சினையில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (36) என்பவர் சசிக்குமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக நெல்லை மாநகர மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் அண்ணாதுரை மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு பாலமுருகனை தேடி வருகின்றனர்.
பாலமுருகனின் தந்தை அழகுபாண்டியன் நெல்லை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சுப்பையாபுரத்தில் பிள்ளையார்கோவில் அமைப்பதற்காக இடம் கொடுத்துள்ளார்.
அந்த இடம் சம்பந்தமாக அழகுபாண்டியன் மற்றும் சசிக்குமார் ஆகியோர் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இவர்கள் 2 பிரிவாக பிரிந்து அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த மாதம் 27-ந்தேதி அழகுபாண்டியன் மானூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் சசிக்குமார் மற்றும் அவரது தரப்பினர் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அழகுபாண்டியனின் மகன் பாலமுருகன், எப்படியாவது சசிக்குமாரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
அவர் மார்க்கெட்டுக்கு தனியாக காய்கறிகள் ஏற்றி செல்வதை நோட்டமிட்ட பாலமுருகன் அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு வைத்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே பாலமுருகன் திருச்சியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர். அவரை கைது செய்த பின்னரே, வேறு யாருக்கெல்லாம் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளது என்பது தெரியவரும்.