தற்கொலை 
உள்ளூர் செய்திகள்

திசையன்விளையில் போலீஸ் நிலையம் அருகே வி‌ஷம் குடித்து வியாபாரி தற்கொலை

திசையன்விளையில் போலீஸ் நிலையம் அருகே வி‌ஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் து.சுடலைமணி (வயது 35).

இவரது மனைவி சீதாலட்சுமி (32).இவர்கள் வீட்டிலிருந்து சமோசா தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.

சுடலைமணிக்கும் அதே பகுதியில் உள்ள மற்றொரு மு.சுடலைமணிக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இரண்டு தரப்பினரும் திசையன்விளை போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.

இந்த வழக்கில் கைதான சுடலைமணி சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். மீண்டும் அவர் பக்கத்து வீட்டை சேர்ந்த மு.சுடலைமணியிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது மு.சுடலை மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெருமாள், தங்கசெல்வி ஆகியோர் சேர்ந்து சுடலை மணியை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சுடலைமணி மீண்டும் திசையன்விளை போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கூறியுள்ளார். போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்துவதாக கூறி உள்ளனர்.

இந்த நிலையில் வெளியே சென்ற சுடலைமணி, வி‌ஷம் குடித்துவிட்டு மீண்டும் போலீஸ் நிலையம் அருகே வரும் போது மயங்கி விழுந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சுடலைமணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திசையன்விளை போலீசில் அவரது மனைவி சீதாலட்சுமி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, மு.சுடலைமணி (33), பெருமாள் (37), மோகன்ராஜ் மனைவி தங்க செல்வி (44) ஆகிய 3 பேர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் மு.சுடலைமணி, பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.