நீரில் மூழ்கி பலி 
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காரணி, நிஜாம் பட்டு கூர்ம விலாசம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது45). தொழிலாளி. இவர் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் குடிசை அமைத்து வசித்து வந்தார்.

நேற்று மாலை அவர் மைத்துனர் மகன் கார்த்திக்குடன் கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்றார். தொடர் மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் தற்போது வெள்ளம் பாய்கிறது. இந்தநிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற பாலாஜியையும், கார்த்திக்கையும் தண்ணீர் அடித்து சென்றது. நீரில் மூழ்கிய இருவரும் கூச்சலிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆற்றில் இறங்கி கார்த்திகை மீட்டனர். இதற்குள் பாலாஜியை தண்ணீர் நீண்ட தூரம் இழுத்து சென்று விட்டது. நீரில் மூழ்கிய அவரை கிராமமக்கள் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள், தாலுகா போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே கனகம்மா சத்திரம் அருகே உள்ள குண்ணவளம் ஆற்றின் கரை யோரம் பாலாஜியின் உடல் இன்று காலை கரைஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பாலாஜியின்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.