காட்டுத்தீ 
உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அச்சம்- குரங்கனி சம்பவம் போல் நடக்காமல் இருக்க கோரிக்கை

தேனி மாவட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மாலை மலர்

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள முருகமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்த வண்ணம் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அரியவகை மரங்களும், மூலிகை செடிகளும் எரிந்து சேதமாகின.

மேலும் வன விலங்குகளும் இடம் பெயர்ந்து விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்லும் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பெரும்பகுதி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மேகமலை, பொட்டிப்புறம் அம்பரப்பர் மலை, சின்னமனூர் வனப்பகுதியிலும் நேற்று இரவு காட்டுத்தீ ஏற்பட்டது.

வனத்துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் பகல் பொழுதில் கடும் வெப்பம் நிலவுவதாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று வீசுவதாலும் தீ வேகமாக பரவிவருகிறது.

தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். அதன் பிறகு மலையேற்ற பயிற்சிக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே தீ விபத்தை தடுக்க வனத்துறை சார்பில் தீ தடுப்பு எல்லைக்கோடுகள் வரையப்படும். மலைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் தீ விபத்தை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தீ விபத்து நடந்தவுடன் அதனை உடனடியாக அணைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தற்போது அதிக அளவு தீ விபத்து நடக்கும் இடங்களை டிரோன்கள் மூலம் கண்காணித்து ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் வசதிகளும் வந்துவிட்டன.

இருந்தபோதும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அதிக அளவு தீ விபத்து தொடர்ந்து நடந்து வருவதால் உடனடியாக வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் மீண்டும் ஒரு குரங்கனி சம்பவம் போல் ஏற்பட்டு விடும் என்று அச்சமடைந்துள்ளனர்.