அம்மன் சிலை மீட்பு 
உள்ளூர் செய்திகள்

பாளை தாமிரபரணி ஆற்றில் 3 அடி உயர அம்மன் கல் சிலை மீட்பு

திரிசூலி அம்மன் கோவிலுக்கு சென்று, ஆற்றில் கிடந்த அம்மன் சிலையை வழிபட்டனர்.

மாலை மலர்

நெல்லை:

பாளை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்று படித்துறையில் இன்று அதிகாலை ஏராளமான பொது மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு சிலர் காலில் கல் சிலை போல ஒன்று தட்டுப்பட்டது. இதனால் தண்ணீருக்குள் கிடந்த அதை எடுத்து பார்த்தனர். அப்போது அது 3 அடி உயர அம்மன் கல் சிலை என்று தெரியவந்தது.

அந்த சிலை கல்லினால் செய்து ஒரு மாதத்திற்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. புத்தம் புதியதாக அம்மன் கல் சிலை இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து, அந்த கல் சிலையை கரையில் வைத்து வழிபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள திரிசூலி அம்மன் கோவில் பூசாரி முருகன் அங்கு வந்தார். உடனடியாக அவர் இந்த சிலையை திரிசூலி அம்மன் கோவிலிலேயே வைத்து வழிபடலாம், என்று கூறி, சிலையையும் கோவிலுக்குள் கொண்டு சென்று வைத்தார்.மேலும் 3 அடி உயர அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்களும் இன்று திரிசூலி அம்மன் கோவிலுக்கு சென்று, ஆற்றில் கிடந்த அம்மன் சிலையை வழிபட்டனர். இந்த சிலை இருக்கன்குடி மாரியம்மன் சிலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.