சென்னை:
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 81-57 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. தமிழ்நாடு அணியில் கேப்டன் முயின்பேக் 17 புள்ளியும், அரவிந்த் 15 புள்ளியும் , ஜீவானந்தம் 10 புள்ளியும் எடுத்தனர்.
தமிழக அணி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் அரையிறுதியில் இந்தியன் ரெயில்வேயை எதிர்கொள்கிறது.
ரெயில்வே அணியை வீழ்த்தி தமிழ்நாடு இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. தமிழக அணி முதல் சுற்று லீக்கில் டெல்லி, மிசோரம், உத்தரகாண்டையும், 2-வது சுற்று லீக்கில் அரியானா, ரெயில்வேயையும் தோற்கடித்து இருந்தது. தோல்வி எதையும் சந்திக்காததால் தமிழக அணி நம்பிக்கையுடன் இருக்கிறது.
மற்றொரு அரை இறுதியில் பஞ்சாப்- கர்நாடகா அணிகள் (மாலை 4 மணி) மோதுகின்றன.
தமிழக பெண்கள் அணி கால் இறுதியில் 73-70 என்ற கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தியது. இன்று பிற்பகலில் நடைபெறும் அரை இறுதியில் தமிழக அணி ரெயில்வே அணியை எதிர் கொள்கிறது. ஏற்கனவே அந்த அணியிடம் தமிழகம் ‘லீக்’ சுற்றில் தோற்று இருந்தது.
மற்றொரு அரை இறுதியில் கேரளா-தெலுங்கானா அணிகள் மோதுகின்றன.