பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சந்தான குமார் (வயது 51). இவர் குடும்பத்துடன் நால்ரோடு பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு பணி முடித்து வீட்டுக்கு திரும்பிய சந்தான கிருஷ்ணன் தாராபுரம் ரெயில்வே கேட் அருகே புதுநகர் சாலையில் தனது நண்பரான ஆனந்தன் (36) என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார். சண்முகபுரத்தில் வசித்து வரும் ஆனந்தன் மதுரையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் நகை சரிபார்ப்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் நேற்று இரவு 11.30 மணியளவில் பேசிக் கொண்டு இருந்தபோது அப்பகுதியில் இருந்த இருட்டை பயன்படுத்தி திடீரென ஒரு கும்பல் அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். சந்தானகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்படவே அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மேலும் அவரது நண்பர் ஆனந்தனையும் அந்த கும்பல் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சந்தான குமாருக்கு தலையிலும், ஆனந்தனுக்கு வாயிலும் அரிவாள் வெட்டு விழுந்ததால் அவர்களால் பேச முடியவில்லை. வெட்டியது யார்? எத்தனை பேர் வந்தார்கள்? என்பது குறித்தும் அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டிய நபர்கள் யார்? என்று தேடி வருகின்றனர். வழக்கு விசாரணையில் முன் விரோதம் காரணமாக சந்தானகுமார் அரிவாளால் வெட்டப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அரிவாள் வெட்டில் காயமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தானகுமார் மற்றும் ஆனந்தனை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பார்வையிட்டார். மேலும் சம்பவம் நடந்த இடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.