சென்னை:
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு ஏற்கனவே தேர்தல் முடிந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஊரக உள்ளாட்சி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அருகில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அதேபோன்று தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புக்கு சம்பந்தம் இல்லாத, சுயேச்சை வேட்பாளர்களின் உறவினர்களும் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்காக ஆதரவு திரட்டி வருகின்றனர்.
நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளதால் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புக்கு சம்பந்தம் இல்லாத வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்த பின்னர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத, வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள், தனி நபர்கள் என அனைவரும் அந்தந்த உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும்.
அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகள்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.