சென்னை:
இலங்கை கடலோர பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வது வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது.
ராமேஸ்வரம், நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரிடம் சிக்கி கொள்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
இருப்பினும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே உள்ளன.
அந்த வகையில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் 105 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி தங்கள் வசம் வைத்து இருந்தது.
இந்த படகுகள் அனைத்தையும் விடுவிக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் அதனை வலியுறுத்தின.
இந்த நிலையில் இந்த படகுகளை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது. 105 படகுகளில் முதல் கட்டமாக 65 படகுகள் இன்று ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் உள்ள காரை நகரில் ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.
இதற்காக இலங்கை மீன் வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஏலம் விடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இன்று 65 படகுகள் ஏலம் முடிந்ததும் அடுத்தடுத்த நாட்களில் மற்ற படகுகளும் ஏலம் விடப்படுகின்றன. வருகிற 11-ந்தேதிக்குள் மீதம் உள்ள அனைத்து படகுகளையும் ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக மீனவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமலும், தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமலும் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.