மதுரை:
மதுரை கோச்சடை தனியார் பேருந்து நிறுவன பணிமனையில் காவலாளி பணியாற்றி வந்த முருகேசன் (வயது 65) என்பவர் நேற்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரை யார், எதற்காக கொன்றார்கள்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கோச்சடை பணிமனையில் டிரைவராக வேலைபார்க்கும் டிரைவர் ராமசாமி மற்றும் ஆம்னி பஸ் டிரைவர் மதியழகன் மற்றும் சிலரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது முருகேசனுக்கு அந்த பணிமனையில் கிளீனர்களாக வேலைபார்க்கும் 2 வாலிபர்களுடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. எனவே போலீசார் அந்த 2 பேரையும் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது அவர்களின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகி இருப்பதும், தலைமறைவானதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் அவர்கள் விருதுநகரில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று 2 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது 2 பேரும் உயரமான சுவரின் மீது ஏறி கீழே குதித்தனர். இதில் அவர்களுக்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் நடத்திய விசாரணயில், அவர்கள் விருதுநகர் மாவட்டம், காரைக்குடி, வள்ளுவர் நகர், பர்மா காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சேதுபதி (வயது 21), சம்மட்டிபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த அன்புசெல்வம் மகன் மணிகண்டன் (வயது 19) என்பது தெரியவந்தது.
காரைக்குடியில் உள்ள பள்ளத்தூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேதுபதி படித்து வருகிறார். இவரது தந்தை நகை பட்டறை தொழிலாளி ஆவார்.
மணிகண்டன் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். மேற்கண்ட 2 பேரும் பகுதிநேரமாக லாரி கிளீனர் வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று 2 பேரும் காவலாளி முருகேசனை தாக்கி படுகொலை செய்து ள்ளனர். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான கல்லூரி மாணவர்கள் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
நாங்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள். கோச்சடை பணிமனையில் பகுதி நேர கிளீனராக வேலை பார்த்து வந்தோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்கள் முருகேசனிடம் எங்களுடைய செல்போனை அடமானம் வைத்து 2000 ரூபாய் வாங்கி செலவு செய்தோம்.
இந்த நிலையில் எங்களுக்கு சம்பளம் வந்ததும் நாங்கள் 2 ஆயிரம் ரூபாயை முருகேசனிடம் கொடுத்து செல்போனை திரும்பக் கேட்டோம். அதற்கு அவர் தர மறுத்துவிட்டார். இதை யடுத்து நாங்கள் அவரிடம், ‘நீங்களே செல்போனை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஈடாக எங்களுக்கு மேலும் 4 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுங்கள்’ என்று கேட்டோம். அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இதன் காரணமாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முருகேசன் எங்களை உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த நாங்கள் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கினோம். இதில் அவர் இறந்துவிட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மதுரை கோச்சடை காவலாளி முருகேசன் கொலை வழக்கில் சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பாராட்டு தெரிவித்து உள்ளார்.