கொலை 
உள்ளூர் செய்திகள்

காடையாம்பட்டி அருகே கல்குவாரி காவலாளி சரமாரி வெட்டிக்கொலை

கொலை செய்யப்பட்ட சேகருக்கும் வேறு நபர்களுக்கும் முன்விரோதம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினார்கள்.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பலிக்கம்பட்டி ஊராட்சி பகுதியில் ஒரு தனியார் கல்குவாரி உள்ளது. இங்கு நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் சேகர்(வயது45) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் அங்கேயே தங்கி ஆடு, மாடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று காலை கல்குவாரி ஊழியர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்கு சேகர் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சேகரின் தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்து உடலை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைத்து துப்பு துலக்க முடிவு செய்யப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

கொலை செய்யப்பட்ட சேகருக்கும் வேறு நபர்களுக்கும் முன்விரோதம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொலை செய்யப்பட்ட சேகரின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேகரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.