அரசு பஸ் கண்ணாடி உடைப்பு 
உள்ளூர் செய்திகள்

வேளச்சேரி- திருவான்மியூரில் ரகளை: 2 பேருந்துகளின் கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்த மாணவர்கள்

சென்னையில் மாநகர பேருந்துகளில் மாணவர்கள் ரகளை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பஸ் பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் ரகளை செய்வது தொடர் கதையாகி வருகிறது.

நேற்று முன்தினம் டி.பி.சத்திரம் பகுதியில் மாநகர பேருந்தில் ரகளை செய்த மாணவர்கள், கண்டக்டரை அவதூறாக பேசி தாக்க முயற்சி செய்தனர்.

இந்தநிலையில் சென்னையில் நேற்று 2 இடங்களில் மாணவர்கள் மீண்டும் ரகளையில் ஈடுபட்டு அரசு பஸ் கண்ணாடியை உடைத்துள்ளனர். கோவளத்தில் இருந்து பாரிமுனை நோக்கி தடம் எண் 109 அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

மோகன் என்ற டிரைவரும், பிரகாஷ் என்ற கண்டக்டரும் பணியில் இருந்தனர்.

கொட்டிவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து திருவான்மியூரை சேர்ந்த மாநகராட்சி பள்ளி மாணவர் ஒருவர் பஸ்சில் ஏறி படிக்கட்டிலேயே தொங்கிய படி பயணம் செய்தார். இதையடுத்து கண்டக்டர் பிரகாஷ், மாணவரை உள்ளே வருமாறு கூறி இருக்கிறார்.

இதன் பிறகு திருவான்மியூர் ஆர்.டி.ஓ. சிக்னலில் மாணவர் இறங்கினார்.

திடீரென அந்த மாணவர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தை நோக்கி வீசினார். இதில் கண்ணாடி உடைந்து பஸ்சில் பயணம் செய்த மந்தைவெளி பகுதியை சேர்ந்த தாரணி என்ற பிளஸ்-1 மாணவி காயம் அடைந்தார்.

மார்பில் கல் தாக்கியதில் தாரணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதேபோன்று கிண்டியிலும் பள்ளி மாணவர்கள் கும்பலாக சென்று பஸ் கண்ணாடியை உடைத்துள்ளனர். தி.நகரில் இருந்து மேடவாக்கம் நோக்கி 51-ஏ, சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் பஸ்சில் ஏறிய பள்ளி மாணவர்கள் சிலர் பாட்டு பாடி, நடனமாடிக் கொண்டே சென்றுள்ளனர்.

அங்குள்ள செக் போஸ்ட் அருகில் பஸ் சென்ற போது மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டு கண்ணாடியை உடைத்துள்ளனர்.

இதுதொடர்பாக 11-ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களின் பெயருடன் வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவம் நடந்த இடம் கிண்டி காவல் நிலையம் என்பதால் அங்கு சென்று புகார் அளிக்க வலியுறுத்தினர். அதன்படி டிரைவரும், கண்டக்டரும் கிண்டி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சென்னையில் மாநகர பேருந்துகளில் மாணவர்கள் ரகளை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பஸ் பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது.

எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவர்களின் ரகளையை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.