தற்கொலை 
உள்ளூர் செய்திகள்

மதுரையில் பள்ளி மாணவி தற்கொலை- போலீசார் விசாரணை

மதுரையில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மதுரை:

மதுரை திருப்பாலை மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் மணிராஜன் (வயது 48). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர், சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பினார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 12-ம் வகுப்பும், இளைய மகள் வர்ஷினி (13 வயது) 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

மாணவி வர்ஷினி நேற்று படுக்கையறையில் தனியாக தூங்கிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் வர்ஷினி படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக மணிராஜன் திருப்பாலை போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது, மாணவி வர்ஷினி தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

மாணவி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மேலும் விசாரணை நடத்தினர். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. மணிராஜன் சிவகங்கையில் உள்ள ஒரு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தார். அப்போது அவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து மணி ராஜன் அந்த வீட்டை காலி செய்துவிட்டு, மதுரை திருப்பாலை மீனாட்சி நகரில் உள்ள தங்கை வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். தற்கொலை செய்துகொண்ட மாணவி வர்ஷினிக்கு தனது தாய் மீது அதிக பாசம் இருந்துள்ளது. இந்நிலையில் தாய் இறந்து விட்டதால் அவர் மிகவும் கவலையடைந்தார்.

தாயை இழந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும், அவரது நினைவிலேயே மாணவி வர்ஷினி இருந்துள்ளார். இந்தநிலையில் வர்ஷினி தற்கொலை செய்திருப்பதால், தாயை இழந்த கவலையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரியிடம், தனக்கு கணக்கு பாடம் சரிவர புரியவில்லை. இதனால் எனக்கு பரீட்சையில் மார்க் குறைய வாய்ப்பு உள்ளது. மார்க் குறைந்தால் அப்பா திட்டுவாரா? என்று கேட்டு உள்ளார்.

அதற்கு சகோதரி அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார், கவலைப்படாதே என்று ஆறுதல் கூறியுள்ளார். இதனால் மார்க் குறைந்தால் தந்தை திட்டுவார் என்ற பயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக திருப்பாலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.