சென்னை:
சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரசுக்கு 16 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. இதில் 6 வார்டுகளை மாவட்ட தலைவர்கள் பெற்று விட்டனர். மீதம் உள்ள வார்டுகளுக்கு வேட்பாளர் தேர்வில் கடும் இழுபறி நீடித்தது.
சிலர் டெல்லி வரை பேசி செல்வாக்கை பயன்படுத்தியதால் வேட்பாளராக போட்டியிட கிடைத்த வாய்ப்பை சிலர் பறிகொடுத்தனர்.
மதுரவாயல் தொகுதியில் 92-வது வார்டு காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டின் முன்னாள் கவுன்சிலர் பி.வி.தமிழ் செல்வன். இவர்தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த தமிழ் செல்வன் நேற்று மாலையில் சத்திய மூர்த்தி பவனில் நியாயம் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் 20 காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடிய விடிய இந்த போராட்டம் நடந்தது. எல்லோரும் அங்கேயே படுத்து தூங்கினார்கள். இன்று காலையிலும் போராட்டம் தொடர்ந்தது. இதனால் சத்திய மூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக தமிழ் செல்வன் கூறியதாவது:-
30 வருடமாக காங்கிரசில் இருக்கிறேன். மாணவர் அணி, இளைஞர் காங்கிரஸ், மாநில பொது செயலாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளேன்.
கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. அப்போது வெற்றி பெற்ற 2 கவுன்சிலர்களில் நானும் ஒருவன். அப்போதும் இதே வார்டில்தான் போட்டியிட்டேன்.
எல்லா தகுதியும் இருந்தும் சில உள்ளடி லேலைகளால் எனது வாய்ப்பு தட்டிப்பறிக்கப் பட்டுள்ளது. எனவேதான் நீதி கேட்டு போராடுகிறேன் என்றார்.
இதற்கிடையில் இந்த போராட்டம் பற்றி கேள்விப்பட்டு தமிழக காங்கிரசின் மேலிட பார்வையாளர் ரமேஷ் சென்னிதலா, தமிழ் செல்வனுடன் பேசினார்.
அப்போது உங்கள் (தமிழ் செல்வன்) பிரச்சினைகளை ராகுல் காந்தியிடம் கூறியிருக்கிறேன். நிச்சயமாக உங்கள் உழைப்பு வீண் போகாது. டெல்லி தலைமை உங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் காலை 11 மணியளவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதேபோல் கட்சியின் பெண் நிர்வாகி ஒருவருக்கு தென்சென்னை மாவட்டத்தில் வார்டு ஒதுக்கப்பட்டது. மாநில நிர்வாகிகளும் பெரும் பாலானவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் டெல்லி செல்வாக்கு மூலம் அந்த வார்டு வேறு வேட்பாளருக்கு வழங்கப்பட்டது. இதனால் பெண் நிர்வாகி ஆதங்கத்தில் உள்ளார்.