வழக்கு 
உள்ளூர் செய்திகள்

காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் - இளம்பெண் புகாரால் வழக்குப்பதிவு

சங்கரன்கோவில் அருகே இளம்பெண்ணை காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்து கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் தட்டச்சு பள்ளிக்கு சென்று வந்தார்.அப்போது அவருக்கு, அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

வைரமுத்து குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வைரமுத்துவிடம் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த வைரமுத்து காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

சில நாட்களுக்கு பிறகு அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண், நடந்த சம்பவம் பற்றி சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உறவினர்களையும் அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அதில் ஒரு வாரத்திற்குள் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக வைரமுத்து தரப்பினர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு வாரம் கடந்த பின்னும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் எதுவும் நடக்காததால் வைரமுத்துவின் வீட்டிற்கு சென்று இளம்பெண் மற்றும் அவரது தாயார் கேட்க சென்றுள்ளனர்.

அப்பொழுது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்தரப்பினர் தாய்-மகள் 2 பேரையும் கையால் அடித்து அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வைரமுத்து மற்றும் அவரது உறவினர்கள் மாரிச்சாமி, கன்னியப்பன், செல்வி, சந்திரா, கன்னியம்மாள் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.