பண மோசடி 
உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் பெண் கவுன்சிலர் கணவரிடம் ரூ.30 லட்சம் மோசடி- 4 பேர் மீது வழக்குப்பதிவு

நாகரில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி காங்கிரஸ் பெண் கவுன்சிலர் கணவரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே உள்ள ஆலத்துறை கைலாச விளையை சேர்ந்தவர் சாம்ராஜ். எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஜெகதா கிறிஸ்டி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

இவர்களின் உறவினர் சுஜான்சிங். இவர் மூலம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த மார்ட்டின் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. மார்ட்டின் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஒரு நிதி நிறுவனத்தின் ஏஜெண்டாக உள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் இதன் கிளைகள் உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 மாதங்களில் முதலீடு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும் கூறி உள்ளார்.

திடீரென ஒருநாள் கோவையில் இருந்து நிதி நிறுவன உரிமையாளர்கள் ரமேஷ், அவரது தாயார் லெட்சுமி ஆகியோர் வந்தி ருப்பதாக கூறி திக்கணங் கோட்டில் உள்ள மார்ட்டின் வீட்டுக்கு சாம்ராஜ், அவரது மனைவி ஜெகதா ஆகியோரை அழைத்து சென்றார். அப்போது ரூ.5 லட்சம் முதலீடு செய்யுமாறும், உரிய முறையில் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினார்.

இதையடுத்து மனைவியின் நகைகளை விற்று அதன் மூலம் ரூ.5 லட்சத்தை சாம்ராஜ் செலுத்தினார். அப்போது ஒரு ஒப்பந்த பத்திரமும் கொடுத்தனர். பின்னர் போனஸ் என கூறி, ரூ.50 ஆயிரத்தை சாம்ராஜ் மனைவி ஜெகதாவின் வங்கி கணக்கிற்கு அனுப்பினர். இதை தொடர்ந்து நடைபெற்ற நிதி நிறுவன கூட்டத்துக்கு சாம்ராஜை அழைத்து சென்றனர். அப்போது திடீரென சிறப்பு திட்டத்தை நிறுவனம் அமல்படுத்துகிறது. இதன்படி மிக விரைவாக வட்டி தொகை கிடைக்கும். எனவே ரூ.10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தால், மிகப்பெரிய லாபத்தை ஈட்ட முடியும்.

இந்த சிறப்பு திட்டம் குறுகிய கால திட்டம் என கூறினர். இதையடுத்து சாம்ராஜிக்கு ஆசை வாரத்தைகள் கூறி, சிறப்பு திட்டத்தில் சேருமாறு வலியுறுத்தினர். இதை நம்பி பல்வேறு தவணைகளாக ரூ.30 லட்சம் வரை செலுத்தி சிறப்பு திட்டத்தில் சாம்ராஜ் சேர்ந்துள்ளார். ஆனால் பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் அவர்கள் கூறிய படி பணத்தை கொடுக்க வில்லை. இது தொடர்பாக பலமுறை கேட்டும் பலன் இல்லை.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் சாம்ராஜ் புகார் செய்தார். பின்னர் பத்மநாபபுரம் கோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன்படி தற்போது குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீ சார் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரமேஷ், அவரது தாயார் லெட்சுமி மற்றும் மார்ட்டின், சுஜான் சிங் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மார்ட்டின் என்பவரது வீட்டில் இருந்து போலீசார் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.