உள்ளூர் செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் கியாஸ் ரெகுலேட்டரில் மறைத்து எடுத்து வந்த ரூ. 27.19 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கே.கே. நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களில் அதிக அளவிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 2 தங்க காசுகளும் 2 தங்க மோதிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் கியாஸ் ரெகுலேட்டரில் மறைத்து எடுத்து வந்த ரூ.27.19 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.