பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சொத்து பத்திரத்தின் மூலம் கடன் பெற்று டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என பலரிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
இதற்கு சம்மதித்த பொதுமக்களிடம் சொத்து பத்திரங்களை வாங்கி வங்கியில் அடமானம் வைத்து சுமார் ரூ.100 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரவீனா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்று இரவு பல்லடத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.