கைது 
உள்ளூர் செய்திகள்

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்- 5 பேர் கைது

பொன்னேரி அருகே பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

மாலை மலர்

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த இலவம்பேடு பகுதியில் பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் லாரியில் இருந்து சரக்கு வாகனங்களில் மூட்டை மூட்டையாக குட்கா ஏற்றப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது லாரியில் இருந்து 3 சரக்கு வாகனங்களில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை மூட்டைகள் ஏற்றப்படுவது தெரிந்தது.

இதையடுத்து அங்கிருந்த 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். குட்கா மூட்டைகளுடன் மினிலாரி, 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிப்பட்ட குட்கா, புகையிலையின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

விசாரணையில் கைதானவர்கள், சென்னை மணலியை சேர்ந்த அருள்குமார், குமரேசன், வழுதிகை மேடை சேர்ந்த சுபாஷ், கொடுங்கையூரை சேர்ந்த பொன்னுதுரை, கள்ளக்குறிச்சியை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பதும் பெங்களூருவில் இருந்து லாரி மூலம் குட்காவை கடத்திவந்து சரக்கு வாகனங்களில் பிரித்து அனுப்பி பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு சப்ளை செய்ய இருந்ததது தெரியவந்தது.

குட்கா, புகையிலை பொருட்கள் யார்? யாருக்கு? செல்கிறது என்பது குறித்து கைதான 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.