செம்மரக்கட்டைகள் 
உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி அருகே வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கசாவடி பகுதியில் ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக, தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே, அவரது தலைமையிலான போலீசார் நேற்று மாலையில் அந்த குடோனுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அங்கு லோடு ஏற்றப்பட்ட டாரஸ் லாரியில் தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்தது. அந்த தார்ப்பாயை போலீசார் திறந்து பார்த்தனர்.

அப்போது அதில், சுமார் 5 அடி நீளம் கொண்ட செம்மரக்கட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் ரூ.10 கோடி மதிப்பிலான 20 டன் செம்மரக்கட்டைகள் கடத்துவதற்காக லாரியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து லாரியுடன் 20 டன் செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த செம்மரக்கட்டைகளை ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வந்திருக்கலாம் என்றும், இங்கிருந்து கன்டெய்னரில் சரக்குகளுக்கு இடையே மறைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக குடோனில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.