உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி படுகாயம்- போலீசார் விசாரணை

எதிர்பாராதவிதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் துண்டானது. சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 40). இவர்மீது பல கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியான இவர் நேற்று இரவு அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் துண்டானது. மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

திருவாரூரில் இருந்து முகில் என்ற மோப்ப நாயும் நாகப்பட்டினத்தில் இருந்து அகிலா என்ற மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT