ஆலந்தூர்:
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் 3வது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்ற விக்கி. 26 வயதான இவன் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தான்.
ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேட்டிலும் விக்கியின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் விக்கிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்1 மாணவி மீது காதல் ஏற்பட்டது. அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து பேசி தொந்தரவு கொடுப்பதை விக்கி வழக்கமாக வைத்திருந்தான்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் விக்கி நன்றாக குடித்து விட்டு போதையில் தகராறு செய்தான். அப்போது தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டுக்கு எதிரே சென்று ரகளையில் ஈடுபட்டான். மாணவியை தான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று போதையில் உளறியபடியே கல்வீசி தாக்குதலிலும் ஈடுபட்டான்.
விக்கி வீசிய கல் அருகில் உள்ள ஹேமாவதி என்பவரின் வீட்டில் போய் விழுந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹேமாவதியும், உறவினர்களும் விக்கியை தட்டிக் கேட்டனர். அப்போதும் அடங்காத அவன் உங்கள் எல்லோரையும் வெட்டி கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்தான்.
இதனைத் தொடர்ந்து அருகில் வசிக்கும் ஹேமாவதியின் தாய் வள்ளாத்தாள் (65) அங்கு வந்தார். அப்போது விக்கி கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்து வள்ளாத்தாள் ஏன் இப்படி செய்கிறாய்? பிரச்சினை செய்யாமல் ஒழுங்காக போய் விடு என்று கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விக்கி திடீரென தான் கையில் வைத்திருந்த கத்தியால் வள்ளாத்தாளின் தலையில் சரமாரியாக வெட்டினான். இதில் வள்ளத்தாளின் தலையில் 3 இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வள்ளாத்தாளை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வள்ளாத்தாள் பரிதாபமாக உயிரிழந்தார். வள்ளாத்தாளை வெட்டிக்கொன்ற ரவுடி விக்கி கத்தியை போட்டு விட்டு ஓடி விட்டான்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த வள்ளாத்தாளின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய விக்கியை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தனர்.